சுயநலம் கருதி நாம் புரியும் ஒவ்வொரு செயலும், நமக்கு பொதுநலப் பாடமாய், நம் கர்மபலனாய் நம் முன்னே மீண்டும் தோன்றியே தீரும். அதுவே விதி! நம்மை ஆட்டிப்படைக்கும் கர்மாவின் சுழலிலிருந்து மீண்டு முக்தி தேட சரணாகதியே வழி! எல்லாம் கர்மவினை என்றால், நாம் எதற்கு? நடப்பது தான் நடக்குமெனில் முயற்சி தான் எதற்கு? கட்டுக்கடங்காமல் ஓடும் காட்டாற்று வெள்ளம் போன்ற பிரபஞ்சத்தின் ஓட்டத்திலும், எங்கும் நிறைந்த சர்வேஸ்வரனின் ருத்திர தாண்டவ ஆட்டத்திலும், நாம் ஆற்றும் பங்கு தான் என்ன? இது போன்ற கேள்விகளுக்கு விடை, கர்மாவுக்கும் கர்மபலனுக்கும் உள்ள இடைவெளியைக் கடந்தால் கிடைக்கும். நமக்கு நடப்பது நம் கர்மங்களின் பலன். நாம் இருப்பது / நினைப்பது / செய்வது நம் கர்மா. கர்மா விதை என்றால், கர்மபலன் மரம். நமக்கு நடக்கும் கர்ம பலன், நாம் நடக்கும் விதமான கர்மாவிலிருந்தே விளைகிறது. அறியாமையால், நாம் நமக்கு நடக்கும் கர்மபலனைப் பற்றிக் கவலைப்படுகிறோமே தவிர, நாம் நடக்கும் விதமான நம் கர்மாவைப் பற்றிக் கவலைப்படாமல் அலட்சியமாக இருந்து விடுகிறோம். விதைப்பதை விதைத்துவிட்டு, விளைந்த பின் வருந்தும் விந்தை தான்...
இக்கணம் போலவோர் பொற்கணம் வாழ்வெலாம் றெக்கை கொண்டாடிடும் கலாபமாய்த் தோன்றிட திக்கெலாம் ஒலித்திடும் அவன்பறை ஓங்கிட அக்கணங்கள் சேர்ந்து நான்மறைகளெங்கும் ஓதிட சிக்கனங்களன்றி அருள் சொக்கணும் பேரருவியாய் சொக்கனும் தேவியோடு நிற்கணும் மனத்தினுள் தெற்கிலும் மேற்கிலும் கீழ்வடக்கு திக்கு யாவுமே நற்குணங்கள் தங்க ஓம் நமச்சிவாய வாழ்கவே!