எல்லாம் கர்மவினை என்றால், நாம் எதற்கு? நடப்பது தான் நடக்குமெனில் முயற்சி தான் எதற்கு? கட்டுக்கடங்காமல் ஓடும் காட்டாற்று வெள்ளம் போன்ற பிரபஞ்சத்தின் ஓட்டத்திலும், எங்கும் நிறைந்த சர்வேஸ்வரனின் ருத்திர தாண்டவ ஆட்டத்திலும், நாம் ஆற்றும் பங்கு தான் என்ன?
இது போன்ற கேள்விகளுக்கு விடை, கர்மாவுக்கும் கர்மபலனுக்கும் உள்ள இடைவெளியைக் கடந்தால் கிடைக்கும்.
நமக்கு நடப்பது நம் கர்மங்களின் பலன். நாம் இருப்பது / நினைப்பது / செய்வது நம் கர்மா. கர்மா விதை என்றால், கர்மபலன் மரம். நமக்கு நடக்கும் கர்ம பலன், நாம் நடக்கும் விதமான கர்மாவிலிருந்தே விளைகிறது.
அறியாமையால், நாம் நமக்கு நடக்கும் கர்மபலனைப் பற்றிக் கவலைப்படுகிறோமே தவிர, நாம் நடக்கும் விதமான நம் கர்மாவைப் பற்றிக் கவலைப்படாமல் அலட்சியமாக இருந்து விடுகிறோம். விதைப்பதை விதைத்துவிட்டு, விளைந்த பின் வருந்தும் விந்தை தான் மனித வாழ்க்கையின் மாபெரும் முரண்.
நாம் நினைக்கும் எண்ணம், நாம் நடக்கும் விதம், நடத்தும் செயல், கூறும் பொய், பாராட்டும் வன்மம், செய்யும் தர்மம், செய்த பாவம், இவை நம்மை விட்டு விலகுவதில்லை. இவையே நமது வாழ்வில் நடக்கும் தருணங்களாய், நாம் எதிர்கொள்ளும் மனிதர்களாய், நட்பாய், உறவாய், சம்பவங்களாய் உருவெடுத்துக் கண் முன்னே தோன்றி, தர்ம காரியஙகள் செய்யும் வாய்ப்பாய் மீண்டும் வலம் வருகின்றன. ஆனால், நாம் அதிலும் சுயநலம் கருதி வந்த வாய்ப்பைத் தவற விட்டு, மேலும் கர்மாக்கள் பல தேடிக்கொள்கிறோம். இவை மீண்டும் கர்மபலனாகி நம்மையே சேரும். நம் கர்மா நம்மை விட்டு விலக வழியில்லை, நம் கர்மபலனாகி மீண்டும் நம் கண் முன்னே தோன்றுவதே நம் கர்மாவின் விதி.
நம் கர்மாவிற்கு நாமே பொறுப்பு, அதைப் பொறுத்ததே நம் கர்ம பலன்; இதை உணராதிருப்பது, படிக்கும் பொழுது விட்டுவிட்டு பரீட்சையின் பொழுது கவலைப்படுவதற்கு ஈடாகும். பரீட்சையின் முடிவு கர்ம பலன், படிப்பது நம் கர்மா. கர்மாவில் கவனம் செலுத்தினால், கர்மபலனைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
![]() |
Image source here |
யாரோ, எப்பொழுதோ, எங்கேயோ எழுதியதல்ல நம் விதி. பல காலந்தொட்டு, பல ஜென்மங்களாய், இந்தப் பிறப்பில் இத்தருணம் வரை நாம் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் கதையே நம் கர்ம பலனாகி நிற்கிறது. இதை உணர்ந்தால், நம் கஷ்டங்களுக்குப் பிறரைக் குறை கூற மாட்டோம். பூச்செடியோ, முட்செடியோ, அது நாமிட்ட விதைகளே என உணர்வோம். நமது கர்மபலனுக்கு பிறரையும் விதியையும் பழிக்கும் ஒவ்வொரு வினாடியும், நம் வாழ்வை நாமே நிர்ணயிக்கும் வாய்ப்புகள் என்றுணர்ந்தால், ஒரு வினாடியைக்கூட வெறுப்பில், கோபத்தில், வஞ்சத்தில், சூழ்ச்சியில், பொறாமையில் வீணடிக்க மாட்டோம்; கூசாமல் பொய்கள் பல பேசி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள மாட்டோம்; மற்றவரின் சொத்தை அபகரித்து, பாவங்கள் பல தேடிக்கொள்ள மாட்டோம்.; சுயநலமாய் மற்றவரின் தேவைகளை நிராகரிக்க மாட்டோம். உண்மையில், சுயநலம் கருதி நாம் புரியும் ஒவ்வொரு செயலும், நமக்கு பொதுநலப் பாடமாய், நம் கர்மபலனாய் நம் முன்னே மீண்டும் தோன்றியே தீரும். அதுவே விதி! அப்பொழுது விதியின் மேல் பழி போடுவது அறியாமையின் உச்சம், நம் பாடங்களை நாம் இன்னமும் கற்கவில்லை எனில் அப்பாடங்கள் மீண்டும் மற்றொரு தருணத்தில், வேறொரு ரூபத்தில் நமக்குக் கற்றுக் கொடுக்கப்படும். எத்தனை காலமானாலும், எவ்வளவு ஜென்மஙகளெடுத்தாலும், நம் கர்மாக்கள் நம் கர்ம பலன்களாகி, நம் பாடங்களாக நம்மை வலம் வரும். கற்றுத் தேறினால் தானே அடுத்த பாடத்திற்கும் முக்திக்கும் வழி? நம்மை ஆட்டிப்படைக்கும் கர்மாவின் சுழலிலிருந்து மீண்டு முக்தி தேட சரணாகதியே வழி!
"இனியொரு விதி செய்வோம்" என பாரதி சூளுரைத்தது, நம் விதியை நிர்ணயிப்பது நாமே என்பதை உணர்த்தவே. "கடமையைச் செய், பலனை எதிர்பாராதே" என்ற கிருஷ்ண பரமாத்மாவின் வாக்கும், நம் விதிகளை நாமே விதிக்கிறோம் என்ற நிதர்சனத்தின் பிரதிபலிப்பே.
இனியாவது விதியின் பெயரில் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதை விடுத்து, நம் விதிக்கு நாமே பொறுப்பேற்போம். நம் கர்மாவே நமது கர்ம பலன்; அதுவே நம் விதி!
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
Comments
Post a Comment