அந்நியரும் வஞஂசகரும் பாரதத்தை விட்டொழிய
மெய்யுணரத் தீக்குளித்தார் சத்தியத்தில் காந்தி.
பொய்யுரைத்து மானுடத்தைத் தீயிலிடும் மாந்தர் தாம்
வந்தவழி மறந்தனரே பல முகத்திரைகள் ஏந்தி.
தீயிலிட்டும் வெந்திடாத நித்தியமாம் சத்தியத்தை
வெறியாட்டமிடும் மூடர் முற்றிலுமாய்த் துறந்தனரோ?
உள்ளிருக்கும் ஞானமதை எள்ளளவும் உணராது
உடலளவில் நடமாடி உணர்வளவில் இறந்தனரோ?
சாகாத தர்மமது கலியரசன் கட்டளையால்
ஆகாத கர்மங்களைப் பாராதது போல் துஞஂசிடினும்
மாறாத பக்தி கொண்ட எளியவரும் உயிர்வாழ
மற்றுமொரு உத்தமனைக் காலமது தந்திடுமோ?
வெற்றிக்கு வித்திடவும், உயரிடத்தை எட்டிடவும்
மீண்டுமொரு காந்தியை மனம் எதிர்நோக்குவதேன்?
உனக்குள் இருக்கும் நேர்த்திமிகு நாயகனை
துயில் மீண்டெழச் செய அது மறுப்பதுமேன்?
நாட்டையே காப்பதுவும் பலர் சூழ்ச்சியை வீழ்ப்பதுவும்
உனக்குள் அரங்கேறும் சிவ தாண்டவமானால்
மாற்றுவதும் நிலைமாறி விழித்தெழுவதும்
உனையன்றி வேறில்லை மறப்பதுமேன்?
Comments
Post a Comment